மறுமை வருவதற்கான சில அடையாளங்கள்


மறுமை நாள் வரும் முன் சில அடையாளங்கள் நிகழும். அந்த அடையாளங்கள், மருமை நாள் நெருங்கிவிட்டது என்பதற்கான சான்றுகளாக அமையும். இந்த சான்றுகள் பற்றி அல்லாஹ் திருக்குர் ஆனிலும் குறிப்பிட்டுகின்றான். நபி (ஸல்) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கின்றான்.

மறுமை அடையாளங்களில் சிறிய அடையாளங்களும் உண்டு. பெறிய அடையாளங்களும் உண்டு. சில அடையாளங்கள் நடந்து முடிந்துள்ளன. அந்த அடையாளங்களை நாமும் கண்டு, அனுபவித்துதுள்ளோம். சில அடையாளங்களோ வெகு விரைவில் ஏற்பட உள்ளன. மறுமை அடையாளங்கள் பற்றி இனி அறிவோம்


01. சிலை வணக்கம் செய்வர் முஸ்லிம்கள்.


எனது சமுதாயத்தில் உள்ள சில கோத்திரத்தினர் இணை வைப்பவர்களுடன் சேராத வரை – அவர்களின் சிலைகளை வணங்காத வரை மறுமை நாள் ஏற்படாது. மேலும் எனது சமுதாயத்தில் முப்பது பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள் அனைவரும் தம்மை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடுவார்கள் நான் நிபிமார்களின் முத்திரையாவேன் நிச்சயமாக என்குப்பின் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸவ்பான் (ரழி), நூல்: திர்மிதி, அபுதாவூத்



தங்களை முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர், இன்றும் கூட சிலை வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு கொள்வதைக் காணலாம். குழந்தை இல்லாத முஸ்லிம் பெண்களில் சிலர், தங்களுக்கு குழந்தை வேண்டி, கோவில்களில் தொட்டில் கட்டிவிடும் நிகழ்ச்சியைக் காண்கிறோம். கோவில் விழாக்களில் முழு அளவில் பங்கடுக்கும் முஸ்லிம்களும் உண்டு. ஓரிறைக் கொள்கைப் படி வாழ வேண்டியவர்கள், சிலை வணக்கத்திலும் ஈடுபடுவது மறுமை நாளின் அடையாளமாகும்.


02. அறியாமை பெருகும்


'மறுமை நாளுக்கு முன் ஒரு காலம் வரும், அப்போது அறியாமை நிலவும். கல்வி அகற்றப்படும். 'ஹர்ஜ்' பெருகிவிடும். ஹர்ஜ் என்பது கொலையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: புகாரி (7063)



முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இல்லாத பல வசதிகளை இன்று நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் முன்னோர்களிடம் இருந்த நற்செயல்களில் பல, நம்மிடம் இல்லை என்பதை ஏற்கத்தான் வேண்டும். அறிவுள்ளவர்களின் நடவடிக்கை நம்மிடம் குறைந்து விட்டது என்பது நம்மிடம் அறியாமையும் குடியேறி விட்டது என்பதற்கானச் சான்றாகும். அறிவாளிகள் என்று அறியப்படுவோரிடம் அறிவு கெட்ட செயல்கள் மலிந்து கானப்படும்போது, மறுமை நாள் மிக அருகிள் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.


03. விபச்சாரம், குடி அதிகரிக்கும்


'கல்வி உயர்தப்படுவதும், அறியாமை மேலோங்குவதும், விபச்சாரம் பெருகுவதும், மதுபானம் அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் நிர்வகிக்கும் அளவுக்கு பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைவதும் மருமை நாளின் அடையாளங்களாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ.



மறுமை நாளின் அடையாளங்களாக விபச்சாரமும், குடியும் பெருகும் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது இன்று உண்மையாகி உள்ளது. விபச்சார விடுதிகளை அரசே அங்கீகாரம் செய்து ‘ரெட் லைட் ஏரியா’ என ஒரு பகுதியை ஒதுக்கி விபச்சாரம் நடைபர அனுமதிக்கிறது. நட்சத்திர ஹோட்டல் என்ற பெயரிலும் ‘ஹைலவள்’ விபச்சாரமும் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது

குடியைச் சொல்ல வேண்டியதே இல்லை. குடியைத் தடுக்க வேண்டிய அரசு, குடிபானங்களில் அரச அங்கீகாரம் பெற்றவை என முத்திரையிட்டு விற்பதைக் காணலாம். அரசே மதுபானக்டைகளின் ஏகபோக உரிமையாளர்களாக இருப்பதுதான் ஆச்சரியம். எப்படியோ நபி (ஸல்) அவர்கள் கூறிய அடையாளம் உண்மை படுத்தப்பட்டது. இதன் மூலம் மறுமை மிக விரைவில் வரும் என்பது உறுதியாகிறது.


04. ‘கொலை’ அதிகரித்தல்


‘மறுமை முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது, கல்வி மறைந்து போய் அறியாமை வெளிப்படும்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: புகாரி (7066)



அநியாயமாக ஓர் உயிரை பறிக்கும் கொலை பாதகச் செயலை செய்யும் முன் பலமுறை யோசித்தது அந்த காலம். இப்போதோ கொலை செய்வதற்கன கூலிப்படைகள் உண்டு. பிடிக்காத நாடுகளில் உயிர் பலிகள் சர்வ சாதாரணமாக நடைபெற, பெறிய நாடுகள் ஏற்பாடு செய்கின்றன. இதனால் குண்டு வெடிப்பும், அணுச்சோதனையும், இரசாயன ஆயுதப் புரட்சியும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையாக மாறிவிட்டன. இதுவும் மறுமை நாள் நெருங்கிவிட்டது என்பதற்கு அத்தாட்சியாக உள்ளது.


05. காலம் சுருங்கும்


‘காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி நேரம் போன்றும் , ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எறியும் நேரம் போன்றதாகவும் இருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல்: அஹ்மத்



காலம் சுருங்கி உள்ளது உண்மைதான். ஒரு காலத்தில் ஒரு ஊருக்கு பயணம் எனில் பலமாதம், பலவாரம், பலமணிநேரம் என செலவழித்து ஒட்டகை – குதிரை என பயனம் புறப்பட வேண்டும். ஆனால், ஒரு மாதம் காலம் பயனம் செய்தால் போய் சேர வேண்டிய இடத்தை சில மணி நேரங்களில் போய் சேரும் அளவுக்கு விமான வழி போக்குவரத்து மூலம் காலத்தை சுருக்கிவிட்டோம்.

செய்திகள் பரிமாற பறவை, மிருகம் போன்றவற்றைப் பயன்படுத்தி சில வாரங்களுக்கு பின் அச்செய்தியை சேர்க்கப் படாத பாடுபட்ட மனித இனம்; இன்று ஈமெயில், இன்டர்நெட் என செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வது, காலம் சுருங்கி விட்டது, மறுமை வரப்போகிறது என்பதை உணர்த்துகின்றது.


06. குழப்பங்கள் வழியும்


'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றிக்கிடையே (மெளனமாக) உட்கார்ந்திருப்பவன், (அதற்காக) எழுந்து நிற்பவனை விடவும், அவற்றிக்கிடையே எழுந்து நிற்பவன், நடப்பவனை விடவும் அதற்காக நடப்பவன் - அவற்றில், ஓடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். எவர் இதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவரை அவை அழிக்க முயலும். அப்போது ஒருவர் ஒரு புகளிடத்தையோ, பாதுகாப்பிடத்தையோ பெற்றால், அவர் அதன் மூலம் தம்மை தற்காத்துக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி (7081)



குழப்பம் ஏற்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தருகிறார்கள்.குழப்ப நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் குழப்பமே மிகைத்து நிற்கின்றது. நபித்தோழர்களின் காலத்திலேயே ஆட்சி அதிகாரப்போட்டி துவங்கியது முதல் இன்று வரை குழப்பம் இருக்கவே செய்கிறது.

மேலும் குழப்ப நிலைகள் தோன்றும் என்பதும் உறுதியாகிறது. அந்த குழப்பத்தின் போது மனிதன் தன்னை விளக்கிக் கொள்வதே சரியான செயலாகும். குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இருக்கும் என்பதை கவனிக்கும் போது, மறுமை நாள் மிக நெருக்கத்தில் வர உள்ளது என்பது உறுதியாகிறது.


07. தனிமையை விருப்பமாகும்


‘மக்களுக்கு ஒரு காலம் வரும், அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களில் இருந்து தமது மார்க (விசுவாச)த்தைக் காப்பாற்றிட அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு அவர் மலை உச்சிக்கும், மழைத்துழிகள் (கணவாய், பள்ளத்தாக்கு) பகுதிகளுக்கு சென்று வாழ்வர்.’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஸயீத் அஸ்குத்ரீ (ரழி), நூல்: புகாரி (6495)



குழப்பம் மலிந்து ஈமானை பாதுகாத்திட வழி இருக்காதா? என எண்ணும் நிலை வரும். அப்போது தன் ஈமானை பாதுகாக்க ஒரு முஸ்லிம் தன் ஆட்டை ஓட்டிக் கொண்டு , மக்களை விட்டு தனியே போய் இருக்கும் அளவுக்கு சூழல் அமையும்.

இப்போது இந்த நிலை வந்துவிட்டது. நமக்கேன் வம்பு? என்று என்னும் நிலை உருவாகி, தனிமையே நல்லது என்றாகிவிட்டது. இதுவும் மறுமை நாள் நெருங்கிவிட்டது என்பதற்கு சான்றாகும்.


08. வாழும் ஆசை அற்று போய்விடும்


'ஒரு மனிதர், மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரைக்) கடந்து செல்லும் போது,'அன்றோ! நான் இவறின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்க வேண்டாமா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி (7115)



தனிமையை விரும்பும் மனிதன் இறுதியில், மரணித்து விட்டால், இந்த குழப்பத்திலிருந்து தப்பிக்கலாமே! என்று கருதும் அளவுக்கு குழப்பம் மலிந்து போய் இருக்கும். அப்படி ஒரு சூழல் உருவாகிக் கொண்டு வருவதை உணர முடிகிறது.

எதிர்காலத்தில் இது அதிகமாகலாம். குழப்ப நிலை ஏற்பட்டு, தனிமை என்றாகி, இறுதியில் மரணித்தால் நலம் என்று எண்ணும் அளவுக்கு குழப்பம் ஏற்படுவதும் மறுமை நாளின் அடையாளமாகும்.


09. தகுதியற்றவனிடம் ஆட்சி இருக்கும்


'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால், மறுமை நாளை எதிர்பார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர்,'நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன? இறைத் தூதர் அவர்களே!' என்று கேட்டார். '(ஆட்சியும் அதிகாரமும் என) பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி (6496)



தகுதியற்றவனிடம் ஆட்சியும் அதிகாரமும், நீதி நிர்வாகமும் ஒப்படைக்கப்படும் அவலம் தறபோது ஏற்படுத்தப்பட்டு விட்டது என்பதை எவரும் மறுக்க மாட்டார். இறையச்சமும், நேர்மையும் உள்ள ஒருவனே அதிகாரம் பெற்றவனாக இருக்க வேண்டும். இன்றோ, தகுதி இல்லாத நபர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படும் நிலையைக் காண்கிறோம். இதுவும் மறுமை நாள் சமீபத்தில் உள்ளது என்பதற்கான அடையாளமாகும்.


10. தவறான தொழிலும் நல்லது என ஆகும்


‘ஒரு காலம் வரும், அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா? (அனுமதிக்கப்பட்டவையா இல்லையா?) என்பதை பொருட்படுத்த மாட்டார்கள்.’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி



நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது. ‘பணம் வேண்டும், சொத்துப் பெருக வேண்டும்’ அதற்கு எந்த தொழிலாயினும் செய்யத் தயார் என்ற எண்ணத்திற்கு மனிதன் வந்து விட்டான். தான் செய்யும் தொழில் மூலம் சமூகமே பாதிக்கும் என்று தெரிந்தாலும் அந்தத் தொழிலைச் செய்கிறான்.

‘இறைவனின் கோபத்தைப் பெற்றுத்தரும் தொழில் இது’ எனத் தெரிந்தும் அந்தத் தொழிலையே செய்கிறான். அனுமதிக்க பட்டுள்ளதா? இல்லையா? என்ற சிந்தனை எல்லாம் போய் விட்டது. ‘நாய் விற்றக் காசு குறைக்கப்போவதில்லை’ என்றும் ‘சாராயம் விற்றக் காசு போதையாகிவிடப் போவதில்லை’ என்று கூறும் அளவுக்கு தவறான தொழிலும் நல்ல தொழில் என ஆகிவிட்டது. இதுவும் மறுமை நாளின் அடையாளமாகும்.




இவற்றுள் ஏதேனும் தவறாக இருந்தால் தெரியப்படுத்தவும்.
இவற்றைப் போன்ற நிறைய அடையாளங்கள் உள்ளன அனைத்தையும் என்னால் உங்களின் கறத்தில் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை.
இவற்றில் நான் குறிப்பிட்ட அனைத்தும் கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற புத்தகத்திலிருந்து குறிப்பிட்டவை எனவே உங்களுக்கு நேரம் கிடைத்தால் அந்த புத்தகத்தை வாங்கி படித்துக்கொள்ளுங்கல்.
நன்றி வஸ்ஸலாம்.